நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனது தொகுதியில் மோட்டாரை திறந்து வைக்க எம்.எல்.ஏ ரோஜா கூட்டத்தை கூட்டியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மாநில அளவில் தொழில்ரீதியான சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஊரடங்கின் முக்கியமான கட்டுபாடுகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் ஆந்திராவின் நாகரி தொகுதி எம்.எல்.ஏவான முன்னாள் நடிகை ரோஜா அந்த பகுதியில் மக்கள் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை திறந்து வைக்க சென்றுள்ளார். அவரை வரவேற்க இருபுறமும் மக்கள் நின்று பூக்களை தூவும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சி கூட்டங்களையே தவிர்த்து வரும் நிலையில் ஒரு எம்.எல்.ஏ இப்படி செய்திருக்க கூடாது என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தே மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சிலர் கூறியுள்ளனர்.