கல்விக் கட்டணம் கட்டப்படவில்லை என்பதற்காக 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் அடித்தே கொன்றுள்ளனர்.
இம்பாலைச் சேர்ந்தவர் பிரா தாங்ப்ராம்.இவர் தனது மகன் சுரேஷை, இம்பால் அருகே லாங்கோலில் உள்ள வீட்டு குழந்தைகள் பராமரிப்பு பள்ளியில் சேர்த்துள்ளார். வறுமை காரணமாக அவரால் பள்ளி மற்றும் விடுதிக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருந்து வந்துள்ளது.
கட்டணத்தைச் செலுத்துங்கள் அல்லது உங்களது மகனை அழைத்து செல்லுங்கள் என்று பள்ளி நிர்வாகம் கூறவே, தனது மகனை அழைப்பதற்காக தாங்ப்ராம் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, கட்டணத்தைச் செலுத்தும் வரை, உங்களுடைய மகனை அனுப்ப மாட்டோம் என்று பள்ளி நிர்வாகிகள் கூறவே, தாங்ப்ராம் வீடு திரும்பியுள்ளார்.
திடீரென வெள்ளிக்கிழமையன்று, பள்ளி நிர்வாகிகளே தாங்ப்ராமின் வீட்டிற்கு வந்து சுரேஷை விட்டுள்ளனர். சுரேஷின் உடல் முழுவதும் காயம் இருந்ததால், அதுபற்றி தாங்ப்ராம் கேட்டுள்ளார். அப்போது, கீழ்ப்படியாத காரணத்தினால் உங்களுடைய மகனை அடித்தோம் என்று பகிரங்கமாகவே பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கடும் கோபத்துடன் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் சிறுவன் சுரேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். தற்போது இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.