காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததற்கு ராகுல் காந்தியின் அலோசகர்கள்தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சசர் மிலிந்த் தியோரா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பதவி விலக முன்வந்தனர். இதை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது. தோல்விக்கு அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியது.
இந்நிலையில் தேர்தலில், மும்பையில் தோல்வி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, 'ராகுல்காந்தியின் விசுவாசிகள், உண்மை நிலவரத்தை, காது கொடுத்து கேட்கவில்லை. தேர்தல் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக 'டிவிட்டர்' சமூக வலைத்தளத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
"காங்கிரஸ் மீதான ஆழ்ந்த விசுவாசத்தாலும், தோல்வி குறித்த வேதனையாலும்தான் என் கருத்தை தெரிவித்தேன். வேறு எதுவும் இல்லை. தேர்தலில் போட்டியிட்ட அனுபவம், களப்பணி ஆற்றிய அனுபவம் ஆகியவை அடிப்படையில்தான் இனிமேல் கட்சியில் பதவி கொடுக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.