மும்பையில் ரயில்வே நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக தொலைந்த பர்ஸை போலிஸார் சம்மந்தப்படட் நபரிடம் கொடுத்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் தன்னுடைய பர்ஸை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தொலைத்தார். அதைப் பற்றி ரயில்வே போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தகவல் தெரிந்தால் சொல்வதாக சொல்லி அனுப்பியுள்ளனர். இது நடந்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹேமந்துக்கு வந்த போன் கால் அவரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. உங்கள் பர்ஸ் கிடைத்து விட்டது வந்து வாங்கி செல்லுங்கள் என சொல்லியுள்ளது எதிர்முனைக் குரல்.
இதையடுத்து அவர் ரயில்வே போலிஸாரிடம் சென்று பர்ஸை அதில் இருந்த 300 ரூபாயையும் பெற்றுள்ளார். ஆனால் அது தொலைந்தபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று இருந்துள்ளது. அதை போலிஸார் எடுத்துக்கொண்டு அதை மாற்றி புதிய 500 ரூபாய் நோட்டு தருவதாக சொல்லியுள்ளனர் என ஹேமந்த் சொல்லியுள்ளார். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.