ஷாரூக்கான் நடித்து வெளியாகவுள்ள பதான் படத்தின் பாடல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் மத்திய பிரதேச சபாநாயகர் பதான் படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக காவி நிற ஆடை அணிந்து ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அந்த காட்சி உள்ளதாக பல இந்து அமைப்புகள் படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேசமயம் இஸ்லாமிய அமைப்புகள் சிலவும் பதான் மக்களை இழிவுப்படுத்தும் விதமாக படம் உள்ளதாக படத்திற்கு எதிராக கொடியை உயர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் பதான் படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் “ஷாருக்கான் தனது மகளுடன் இந்த படத்தை சென்று பார்த்து விட்டு, எனது மகளுடன் படம் பார்த்தேன் என உலகுக்கு சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் பற்றி இதுபோன்று ஒரு படம் எடுக்க உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்” என பேசியுள்ளார்.
அதேபோல மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா “பாடல் ஒரு மோசமான மனநிலையை பிரதிபலிக்கிறது. படத்தின் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், படத்தை மத்திய பிரதேசத்தில் வெளியிட அனுமதிப்பது குறித்து யோசிக்க வேண்டி வரும்” என கூறியுள்ளார்.