சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம்: சசிகலாவுக்கு எதிராக கர்நாடக முன்னாள் முதல்வர்!
சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம்: சசிகலாவுக்கு எதிராக கர்நாடக முன்னாள் முதல்வர்!
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்து லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தற்போது கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சசிகலாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறை உள்ள சசிகலாவுக்கு சிறை விதிமுறைகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் என சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தை ஊடகத்தினர் முன்னிலையில் பேசியதால் ரூபாவுக்கு தற்போது துறை ரீதியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தை அம்மாநில முன்னாள் முதல்வர் குமராசாமி கையிலெடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகாவில் வெளியில் உள்ளது போலவே சிறைக்கு உள்ளேயும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. டிஐஜி ரூபா கூறியுள்ள புகார்களுக்கு நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
பெங்களூர் சிறையில் உள்ள வசதியான கைதிகளிடம் லஞ்சம் வாங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சசிகலாவிடம் அதிகாரிகள் 2 கோடி ரூபாய் மட்டுமல்லாமல் மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர். மேலும் சசிகலாவைப் பார்க்க வருபர்களிடமும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளனர்.
ஆதாரங்களோடு புகார் கூறியுள்ள டிஐஜி ரூபா மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது சரியல்ல. உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இந்த விசாரணை முடியும் வரை அதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் நீண்ட விடுப்பில் செல்ல வேண்டும் என அரசு கூறவேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடக்கும்.
மேலும் சசிகலா தரப்பிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் அதனை விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து கொடுப்பேன் அல்லது ஊடகங்களில் வெளியிடுவேன் என அவர் கூறினார்.