கேரளாவில் சிறுமி ஒருவரை கடத்தி சென்ற கும்பல் 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.
அந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன், போதைக்கும் அடிமையாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி பேருந்துக்காக காத்திருந்தபோது அவரிடம் பேச்சுக் கொடுத்து இளைஞர் ஒருவர் சிறுமியை லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். அதை தொடர்ந்து லாட்ஜின் உரிமையாளர் மற்றும் சிலரும் சிறுமியை சீரழித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிய சிறுமியை ஒரு நபர் வேலை வாங்கி தருவதாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் திருச்சூர், வயநாடு, பாலக்காடு என வெவ்வேறு மாவட்டங்களுக்கு 3 மாதங்களாக சிறுமியை கடத்தி சென்று போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அதில் 8 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான 13 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.