கேரளாவில் கொரோனா சிகிச்சையில் இருந்த நபர் ஒருவர் தப்பியோடி விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் இருந்து தப்பி ஓடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் கொல்லம் பகுதியில் கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் இல்லாத நேரம் பார்த்து மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய அந்த நபர் சாலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வர செய்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்துக்குள்ளானவரை பார்க்க வந்த அவரது உறவினர்கள் கூறிய பிறகுதான் அவருக்கு கொரோனா அறிகுறிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து அவரை காப்பாற்றிய நபர்கள், காவலர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்ளிட்ட 40 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு உள்ளான நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அந்த 40 பேருக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.