கேரளா முழுவதும் 100 சதவீதம் இலவச இணைய சேவையை கொடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.
இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. 100 சதவீத கல்வியறிவு, உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள் என அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதையும் ஏழை வீடுகளுக்கு இலவச இணையச் சேவை அளிப்பதையும் அடுத்த இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இணைய வசதியைப் பெறுவது குடிமக்களின் உரிமை என்றும், 20 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச இணையச் சேவை அளிப்போம் என்றும் கேரள இடது ஜனநாயக முன்னணி கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான சட்ட ஒப்புதலை இப்போது கேரள அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த திட்டத்துக்காக 1548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இந்தியாவிலேயே முதன் முதலாக இணையச்சேவையை மக்களின் அடிப்படை உரிமையாக அறிவித்திருக்கும் மாநிலமாக கேரளா திகழ்கிறது.