தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் நண்பன் இறந்ததையடுத்து காஷ்மீர் மாநில கால்பந்து வீரர் லஷ்கர் - இ - தெய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து தற்போது போலீஸில் சரணடைந்துள்ளார்.
காஷ்மீர் மாநில அனந்த்நாக் நகரைச் சேர்ந்த மஜீத்(20) என்பவர் மாநில கால்பந்து வீரர். இவரது தாய், தந்தை இருவரும் அனந்த்நாக் பகுதியில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் அந்த பகுதியில் பிரபலமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கு நடைபெற்ற சணடையில் மஜீத்தின் நண்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மஜீத் மிகவும் வேதனையில் இருந்தார். பாதுகாப்பு வீரர்க்ளை கண்டித்தும் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார்.
3 நாட்களுக்கு முன் மஜீத் ஃபேஸ்புக்கில், நான் லக்ஷர் - இ - தெய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டேன், என்னை தேட வேண்டாம் என்று கூறியுள்ளார். மகன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவலை அறிந்த தாய் படுத்த படுக்கையாகிவிட்டார். மஜீத்தின் தந்தை மற்றும் நண்பர்கள் திரும்ப வந்துவிடும் படி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் நண்பர்களின் பாசத்துக்கு அடிபணிந்து மஜீத் தீவிரவாத இயக்கத்திலிருந்து விலக முடிவு செய்து காஷ்மீர் மாநில போலீஸாரிடம் சரணடைந்தார்.