கர்நாடகாவில் மார்பிங் செய்த போட்டோ ஒன்றை ஒருவர் பகிர்ந்ததன் விளைவாக பெரும் மோதல் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் அபிஷேக் ஹையர்மத். இவர் உப்பள்ளியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளத்தில் காவிக்கொடி பறப்பது போல போட்டோ மார்பிங் செய்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் அபிஷேக் கைது செய்யப்பட்டு உப்பள்ளி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். ஆனால் அபிஷேக்கை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் சிலர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
இரவில் காவல் நிலையத்தில் குவிந்த அவர்கள் காவல் நிலையத்தை கல் வீசி தாக்க தொடங்கியதால் காவலர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.