கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவு செய்துள்ளார்.
முன்னதாக கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவை கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதிவு செய்ததாவது: கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி கிரேடு பணிகளுக்கு முழுவதுமாக கன்னடர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் மசோதாவுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கன்னடர்கள் தங்களின் கன்னட நிலத்தில் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். நாங்கள் கன்னட மக்களுக்கான அரசு. அவர்கள் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை.
இந்த மசோதா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இட ஒதுக்கீடு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.