கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகளுடனான வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாக வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் மக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வேறு அறைக்கு மாற்றுவதாக அப்பகுதியில் செய்தி பரவியதாக தெரிகிறது.
இதனால் அங்கு கூடிய மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சிலர் தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.