காவிரியில் தண்ணீர் திறக்கவும், மேலாண்மை வாரியம் அமைக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திருத்தி அமைக்கக்கோரி, கர்நாடக அரசு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்திற்கு விநாடிக்கு, 6 ஆயிரம் கன அடி வீதம் 6 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்; அக்டோபர் 4-ஆம்தேதிக்குள் காவிரி மேலாண்மைவாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று கறாரான உத்தரவை பிறப்பித்தது.
ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை, கர்நாடக அரசு மீறியதற்கு அப்போது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் தரப்பு பிரதிநிதிகள் பட்டியலை கர்நாடகம், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் சனிக்கிழமை மாலைக்குள் மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கையையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. சனிக்கிழமையன்று காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அதற்கான உத்தரவு எதையும் கர்நாடக அரசு பிறப்பிக்கவில்லை.
மாறாக, சனிக்கிழமையன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய திருத்த மனு ஒன்றை கர்நாடக அரசு தாக்கல் செய்தது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் பிறப்பித்த உத்தரவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.