சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு வாபஸ் வாங்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். கமல் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் இதற்கு மறைமுகமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, '’நாங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அலசி ஆராய்ந்துதான் வருகிறோம். ஆனால் ஊடகங்களில் பிரசாரம் செய்வதன் மூலம் அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பவர்களின் முயற்சி ஒருபோதும் எடுபடாது’ என கூறினார்.
அருண்ஜெட்லியின் இந்த கருத்துக்கு தமது டுவிட்டரில் கமல் கூறியதாவது: யாருக்கும் நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. இது நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். இது எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை. பிராந்திய மொழி சினிமாவைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவுக்கான ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிகள் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிராந்திய மொழிகள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜி.எஸ்.டி வரியைக் குறைத்து பிராந்திய மொழி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்’ என்று பதில் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று வீராப்பாக பேசிய கமல், திடீரென தற்போது இது என்னுடைய வேண்டுகோள், கோரிக்கை என்று திடீர் பல்டி அடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.