குஜராத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட 19,500 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த படுதோல்வியை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்துவருகின்றனர். அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி நோட்டாவிடம் போட்டியிடும் பாஜக என விமர்சித்தார். மேலும் நடிகர் ராதாரவி இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறினார்.
இதனையடுத்து குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ வான ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் உலகிலேயே மிகப்பெரிய மிஸ்டு கால் பார்ட்டி பா.ஜ.க, தமிழகத்தில் 50 லட்சம் மிஸ்டு கால் அழைப்புகள் பெற்றதாக கூறியிருந்தது. ஆனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அவர்கள் பெற்றிருக்கும் ஓட்டுகளோ வெறும் 1417 தான். அது நோட்டா பெற்ற 2,373 வாக்குகளை விட கம்மியானதே. இதை பா.ஜ.க.வினரால் எளிதில் ஜீரணிக்க முடியும் என்று நம்புவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் விமர்சித்துள்ளார்.