ஜெகன்மோகன் ரெட்டி குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதுகுறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.
அந்த ஆடியோவை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.