அமெரிக்கா சென்றிருந்த ராகுல்காந்தி, அங்கு ராமர் குறித்து பேசிய கருத்துகளுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்திருந்த ராகுல்காந்தி அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேசினார். அப்போது அவர் ”இந்தியாவின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதிகளாக திகழ்ந்த புத்தர், குருநானக், பசாவா, நாராயண குரு, ஜோதிராவ் புலே, மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்றோர் மதவெறி பிடித்தவர்கள் அல்ல.
அவர்கள் சமூக நல்லிணக்கத்தையும், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் போதித்தனர். ராமர் போன்ற புராண கதாப்பாத்திரங்களும் கூட அதையே போதித்தன. அதனால் நான் பாஜகவின் வெறுப்பு கருத்துகளை இந்து மத கருத்துகளாக பார்க்கவில்லை” என பேசியிருந்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தி அவரது பேச்சில் புத்தர் போன்றவர்களை உண்மையாக வாழ்ந்தவர்களாக குறிப்பிட்டு பேசிவிட்டு ராமரை மட்டும் புராண கதாப்பாத்திரம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஹக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, இந்துக்களையும், ராமரையும் அவமதிப்பதையே காங்கிரஸும், ராகுல்காந்தியும் வேலையாக கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ராமரும், இந்துக்களும் என்றுமே இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.
ஏற்கனவே மனுஸ்மிருதி பற்றிய ராகுல்காந்தியின் பேச்சுக்காக அவரை இந்து மதத்தில் இருந்து வெளியேற்றுவதாக சங்கராச்சாரியார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K