Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை..! குடியரசுத் தலைவர் பெருமிதம்..! மத்திய அரசுக்கு பாராட்டு..!!

president

Senthil Velan

, புதன், 31 ஜனவரி 2024 (12:02 IST)
அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும், வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம் என கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடப்பது மகிழ்ச்சி என்றும்  சிறப்பு வாய்ந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக உரையாற்றுவது பெருமிதம் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
 
அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் பட்ஜெட் தொடரில் செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக தெரிவித்த திரௌபதி முர்மு, எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்தியா தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது என்று குறிப்பிட்டார்.
 
விளையாட்டு துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் முத்திரை பதித்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.
 
வேலை வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். கடந்தாண்டு பல வரலாற்று சாதனைகளை இந்தியா படைத்ததாகவும், வெளிப்படையான நிர்வாகம் மூலம் நாடு முழுவதும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.  

அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தது பெருமிதத்திற்கு உரியது என அவர் கூறினார். வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குடியரசுத் தலைவர், மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். 
 
ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் முனைவோரை மத்திய அரசு உருவாக்கி உள்ளது என்றும் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஒவ்வொரு துறையிலும் இந்தியா உலக அரங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது என்றும் சராசரியாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7.5% அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
மிக மலிவான விலையில் இந்திய மக்கள் 5g சேவையை  பெற்று வருகின்றனர் என்றும்  இந்திய கிராமங்களும் 5g சேவையை பெறும் காலம் தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
15 லட்சத்துக்கு அதிகமான மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்றும் டிஜிட்டல் துறையில் அளப்பரிய சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

 
விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ஊக்கத் தொகையாக மத்திய அரசு வழங்குகிறது என்றும் ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில் விமான சேவை கட்டணம் குறிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று மத்திய அரசின் பல சாதனைகளை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு பட்டியலிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநாவுக்கரசருக்கு திருச்சி தொகுதி கிடையாதா? துரை வைகோவுக்காக குறி வைக்கும் மதிமுக.!