அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான செய்திகளை வரவேற்றுள்ளார்.
"இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்கு தெரியாது. அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.
டொனால்ட் டிரம்ப் ஜூலை 30 அன்று, இந்திய இறக்குமதிகள் மீது 25% வரி மற்றும் கூடுதல் அபராதங்களை விதித்தது. இந்தியாவின் தொடர்ச்சியான ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் மற்றும் நீண்டகால வர்த்தகத் தடைகள் ஆகியவை இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணங்கள் என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டன என்று செய்தி வெளியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்தியா மற்றும் ரஷ்யா உறுதியான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன" என்று கூறினார். அதே நேரத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகளின் வலிமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். தற்போதைய பதற்றங்கள் இருந்தபோதிலும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.