அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடுபிடி காரணமாக அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் வெகுவாக குறைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றம் தொடர்பாக ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும், விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பது மட்டுமின்றி, முறையான ஆவணம் இல்லாதவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி வருகிறார் என்பதும் தெரிந்தது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்கள் உள்பட பல நாடுகளின் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதை அடுத்து, விமான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மும்பையில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு தற்போது வெறும் 37 ஆயிரம் ரூபாய் எனவும், இரு வழி பயணமாக இருந்தால், 76 ஆயிரம் ரூபாயாக மட்டுமே உள்ளது. டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான கட்டணம் கடந்த ஜனவரி மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக தான் இந்த கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.