சென்னை ஐஐடி விடுதிகளில் தற்கொலை முயற்சியை தடுக்கும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக விடுதிகளில் புதிய மின்விசிறிகளை பொருத்த இருக்கிறார்கள். வழக்கமான மின்விசிறிகளை போல இல்லாமல் இதில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது. யாராவது மின்விசிறியில் கயிற்றை மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றால் மின்விசிறி தரையை நோக்கி கீழிறங்கும். இதனால் தற்கொலை செய்து கொள்வது தடுத்து நிறுத்தப்படும் என கூறியுள்ளனர். மேலும் மாணவர்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்காமல் இருக்க கவுன்சிலிங் போன்றவைகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் மின்விசிறியில் ஸ்பிரிங் வைப்பதால் மட்டும் மாணவர்களை காப்பாற்ற முடியாது. தற்கொலைகள் நடைபெறா வண்ணம் மாணவர்களுக்கு இறுக்கமற்ற சூழலை ஐஐடி உறுதி செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.