இந்திய படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து இஸ்ரேலிய இயக்குனர் நடாவ் லாபிட் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து என நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய இயக்குனரும், ஜூரி குழுவின் தலைவருமான நடாவ் லபிட், இந்தியாவின் தேசிய விருது பெற்ற படமான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்ததுடன், இந்த விழாவிற்கு தகுதியற்ற படம் என்றும் கூறினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இஸ்ரேல் தூதர் இயக்குனர் நடாவ் லபிட்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மேடையில் பேசியபோது நடாவ் அதை ஒட்டுமொத்த நடுவர் குழுவின் கருத்து என கூறியிருந்ததும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதுகுறித்து நடுவர் குழுவில் ஒருவரான சுதிப்தோ சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எந்த திரைப்படத்திலும் எந்த விதமான அரசியல் கருத்துகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். அப்படி செய்தால் அது முற்றிலும் தனிப்பட்ட கருத்து. அதற்கு தேர்வு குழுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பற்றி நிறைவு விழாவில் நடாவ் லாபிட் பேசியது முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து” என தெரிவித்துள்ளார்.