இந்தியாவின் ஒற்றுமையை காக்க வேண்டுமெனில், ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்த மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவித்து இருந்தார். இது குறித்த தனது முகநூல் பதிவில், தான் பல்கலைகத்தில் படித்தபொழுது, தன்னுடைய புத்தகத்தின் முதல் வார்த்தையே ‘தமிழர் வீரம்’ என்று இருந்ததை நினைவு கூர்ந்த அவர், ”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், ”நீங்கள் இந்தியாவின் ஒற்றுமையை காக்க வேண்டுமென விரும்பினால், ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும்” என்றும், ”நாம் நிச்சயமாக தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.