சீமாந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். நகரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, தான் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். நகரி நகராட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு நடிகை ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வடமால் பேட்டை மண்டலத்தில் ஒன்பது மண்டல பரிஷத் இடங்களில் ஆறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜில்லா பரிஷத் உறுப்பினராக சுரேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்களுக்கும் நடிகை ரோஜா வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நகரி சட்டசபை தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவது நிச்சயம். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானால் மட்டுமே ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் அமல்படுத்துவார் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
சந்திரபாபு நாயுடு தேர்தலின்போது கொடுக்கும் வாக்குறுதிகள் வெற்றி பெற்ற பிறகு காற்றில் பறக்கவிட்டு சர்வாதிகாரி போல ஆட்சி நடத்துவார் என்பதை அவரது ஒன்பதாண்டு கால ஆட்சியில் மக்கள் அனுபவித்துள்ளனர். எனவே மக்கள் ஏமாறமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.