இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முழுவதுமாகத் தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இந்திய மிக முக்கியமான நாடாக இருந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகமாகி வருகிறது. இதனால் பெட்ரோல் டீசலுக்கான மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது.
இதனை மத்திய அரசும் ஊக்குவித்து வருகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சாலைகளில் சுமார் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பயன்பாடு முழுமையாக நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து நேற்று டெல்லியில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ’ நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஹைட்ரோ கார்பன் ஆகிய அனைத்து வடிவிலான ஆற்றலும் நமக்குத் தேவை. ஆனால் சுகாதாரமான ஆற்றலை நோக்கிச் செல்லதான் எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதற்காக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனப் பயன்பாடு முழுவதும் நிறுத்தப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.