நாட்டில் சமூக பரவல் துவங்கியுள்ளதாக தோன்றுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறுதல் என்னவெனில் 102 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பதுதான். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 ஆம் கட்டத்தை எட்டிவிடக்கூடும் என அஞ்சப்பட்டது. இது குறித்து தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா 2வது நிலையில் (உள்நாட்டு பரவல்) தான் உள்ளது. 3வது நிலைக்கு (சமூக பரவல்) சென்றுவிட்டால் தொற்றை கட்டுப்படுத்துவது மிக சிரமாகிவிடும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு யார் மூலம் தொற்று வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நாட்டில் சமூக பரவல் துவங்கியுள்ளதாக தோன்றுகிறது.
பெரிய அளவில் சமூக பரவல் எதுவும் நடைப்பெற்றதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. ஏதேனும் தகவல் கிடைத்தால் அது உடனடியாக தெரியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.