கர்நாடக மாநிலத்தில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பட்டியலின மற்றும் பிற பிரிவுகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு இடஒதுக்கீட்டின்படி பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரூ.1 கோடி வரை அரசாங்க ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கும் 4% இடஒதுக்கீடு செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அமைச்சரவையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பாஜக தலைவர் விஜயேந்திரா, "இது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல். சிறுபான்மையர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, மற்றவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., "எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. அதுபோல சிறுபான்மையர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதில் என்ன தவறு? பாஜகவுக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு மட்டுமே தவறாக தெரிகிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் கடும் விவாதத்துக்குள் சென்றுள்ளது.