பல வாகன ஓட்டிகளும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வரும் கூகிள் மேப்பில் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்காக புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பல்வேறு இடங்களுக்கு செல்லவும் கூகிள் மேப்பின் உதவியையே நம்பி உள்ளனர். ஓரிடத்திற்கு செல்வதற்கான எளிதான வழி, இடையே உள்ள ட்ராபிக் நிலைமை என அனைத்தையும் காட்டுவதால் கூகிள் மேப் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. அதேசமயம் சில நேரங்களில் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கூகிள் மேப்பால் சிக்கல்களும் ஏற்படுகிறது.
கூகிள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டிக் கொண்டு சென்று ஆறு, குளம், கம்மாய்க்குள் வண்டியை விடுவது, முட்டு சந்தில் சென்று லாக் ஆவது என பல செய்திகள் அவ்வபோது வந்தபடி உள்ளன. இந்நிலையில்தான் கூகிள் மேப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 4 சக்கர வானனங்கள் குறுகலான, போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்ல AI தொழில்நுட்ப வசதியுடன் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதில் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அறிய முடியும். இதனால் 4 சக்கர வாகனங்கள் நுழைவதற்கு கடினமான சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்த்துக் கொள்ள முடியும். இந்த அம்சம் சென்னை, கோவை, இந்தூர், போபால், புவனேஸ்வர் உள்ளிட்ட 8 இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.