எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் 20 சீட்டுகளை பாஜக எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக ஆட்சியை தக்க வைக்க முயன்று வருகிறது. ஒருபக்கம் காங்கிரஸ், திமுக, திரினாமூல் காங்கிரஸ் என பல மாநில கட்சிகளும் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறையும் அதிமுக- பாஜக கூட்டணியே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே தொடங்கி உள்ளன. இந்நிலையில்தான் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி, ஐஜேகே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கு தொகுதி வழங்க கோரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பான்மைக்கு கீழான தொகுதிகளிலேயே அதிமுக போட்டியிடும் நிர்பந்தம் எழுகிறது.
ஆனால் பாஜக தங்களுக்கு 20 தொகுதி தந்தால் கூட்டணி கட்சிகளிடம் பேசி அந்த 20 தொகுதிகளில் இருந்து தாங்களே பகிர்ந்து தந்து விடுவதாக கூறியுள்ளதாம். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரிக்கும் சிக்கலை இந்த 20 தொகுதியை கொடுத்து தீர்த்து விட்டால் மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் வேலைகளை ஜரூராக தொடங்கிவிடலாமே என்று அதிமுக தரப்பு ஒரு பக்கம் யோசித்தாலும், பாதிக்கு பாதி தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தருவது சரியாக இருக்காது என்றும் மொத்த தொகுதியில் 30 சதவீதம் என்று கணக்கிடுவதே சரி என்றும் ஒரு பக்கம் விவாதம் நடந்து வருகிறதாம்.
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான் என்பதால் எதையும் முடிவாக சொல்ல முடியாது என்கிறது அரசியல் வட்டாரம்.