பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஜெர்மனி இந்தியாவின் பக்கம்தான் உள்ளது என்று, டெல்லிக்கு வருகை தந்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
சர்வதேச ஒழுங்கு மற்றும் விதிகளை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டுவதாகவும், இந்த விஷயத்தில் ஜெர்மனியின் முழு ஆதரவும் இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான உறவு மிகவும் வலுவானது. இந்த சந்திப்பு, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.