கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது பெற்றோர், காதலி உள்பட பலரை சுத்தியலாலேயே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான். இவரது தந்தை ரஹீம் அரபு நாடுகளில் கார் உதிரி பாகங்கள் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு உதவியாக அபானும் அங்கு சென்று பணிபுரிந்துள்ளார். அபானுக்கு பசானா என்ற காதலியும் உள்ளார்.
சமீபத்தில் ரஹீமின் தொழில் நலிவடைந்த நிலையில் அபான் தனியாக தொழில் தொடங்க முயன்றுள்ளார். இதற்காக பாங்கோட்டில் வசித்து வந்த தனது பாட்டி சல்மாபீவி, சித்தப்பா லத்தீப் ஆகியோரிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் அபான் பசானாவோடு சுற்றுவதையும், செலவு செய்வதையும் கூறி அவர்கள் கண்டித்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அபானுக்கு தனது குடும்பத்திலும், காதலி பசானாவிடமும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த அபான் ஒரு சுத்தியலை எடுத்துக் கொண்டு சென்று தனது சித்தப்பா, பாட்டியை அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர் தனது காதலியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர் அங்கு தனது காதலி, சகோதரன், தாய், தந்தை உள்ளிட்டோரையும் சுத்தியலாலேயே அடித்துக் கொன்றுள்ளார்.
அதன்பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்த அவர் விஷம் அருந்தியதோடு, கேஸ் சிலிண்டரையும் திறந்து வைத்துள்ளார். பிறகு நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்து நடந்ததை கூறியுள்ளார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார், சம்பவ இடம் சென்று பார்த்தபோது அபானின் தாய் மட்டும் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். மற்றவர்கள் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர். அபானின் தாய் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொந்த குடும்பத்தினர் அனைவரையும் இப்படி மூர்க்கமாக கொன்றதும், தற்கொலைக்கு முயன்றதும் அபான் மனநல பாதிப்பு ஆளாகியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K