ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே இந்திய படைகள் அதிகம் குவிக்கப்பட்டிருந்தால் அந்த மாநிலத்தில் ஏதோ வித்தியாசமாக நடக்கப்போகிறது என அம்மாநில பொதுமக்கள் அச்சம் அடைந்து வந்தனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மக்களிடம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் தவிர வேறு சில அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் ஸ்ரீநகர் சாலையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பாராளுமன்றம் கூட உள்ளதால் இந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாகவே பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு மற்றும் பார்லிமெண்ட் விவகாரத்துக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது அப்போது ஜம்மு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது