பீகாரில் உள்ள புத்தகயாவிற்கு திருவிழாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் நடைபெறும் காலச்சக்கர பூஜைக்காக பல நாடுகளில் இருந்து பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டு பயணிகளுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களில் இருவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மர் மற்றும் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அங்குள்ள உணவகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.