ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாக இருக்கும் அமராவதி நகருக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டும் சேர்ந்து 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி வழங்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்காக 15 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி உருவாக்க, முதல் கட்டமாக 13,600 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தர இருப்பதாக ஆந்திர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மீதமுள்ள 1400 கோடியை மத்திய அரசு அளிக்கும் என்றும், இந்த திட்டத்திற்கான மொத்த நிதியும் ஐந்து ஆண்டுகளில் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-19ஆம் ஆண்டு காலகட்டங்களில், ஆந்திர முதல்வராக சந்திரபாபு இருந்தபோதே இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
ஆனால், அதன் பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், இந்த திட்டம் கைவிடப்பட்டது என்பதும், ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானதை அடுத்து மீண்டும் அமராவதி திட்டம் தொடங்க உள்ளது.