தந்தை பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்றும், என்னுடைய காதலரைத்தான் நான் திருமணம் செய்வேன் என்றும் இளம்பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அந்த பெண்ணின் தந்தை, மகளை சுட்டுக் கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தாணு குர்ஜார் என்ற 20 வயது பெண்ணுக்கும் விக்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலித்து, திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து தாணு தனது பெற்றோரிடம் பேசியபோது, திருமணத்திற்கு அவருடைய பெற்றோர் சம்மதிக்க மறுத்தனர்.
அவரது தந்தை மகேஷ், அவசரமாக மகளுக்கு திருமண ஏற்பாட்டை செய்து, வரும் 18ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. திருமண அழைப்பிதழ் வரை அச்சடிக்கப்பட்ட நிலையில், தாணு தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, "நான் விக்கியைதான் காதலிக்கிறேன்; அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்; நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன்," என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையில் தாணு புகார் அளித்தார். மகளை சமாதானப்படுத்த அவரது தந்தை மகேஷ் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். ஆனால், காவல்துறையினர் கண் முன்னே மகேஷ் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து, மகளை மகேஷ் சுட்டுக் கொன்றார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து, மகேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.