கேரளாவில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் ரூ.15 லட்சம் போடப்படும் என வதந்தி பரவியதால், தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
கேரளா மாநிலம், மூணாறு பகுதியில், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தால், அந்த கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்வதாக வதந்தி பரவியது. அந்த வதந்தியை நம்பிய அப்பகுதி மக்கள், மூணாறு தபால் நிலையம் முன்பு குவியத் தொடங்கினர்.
காலையிலேயே தபால் நிலையம் முன்பு பொது மக்கள் பெருந்திரளாக குவிந்து கிடந்ததை பார்த்த தபால் நிலைய ஊழியர்கள் அதிர்ந்து போனார்கள். அதன் பின்பு ஊழியர்கள், பொதுமக்களிடம் ரூ.15 லட்சம் போடப்படும் என்பது வதந்தி என கூறினர். ஆனாலும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. பல மணி நேரம் தபால் நிலையத்தில் காத்திருந்து சேமிப்பு கணக்கை தொடங்கிய பிறகே கலைந்து சென்றனர்.
இது குறித்து மூணாறு தபால் துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ரூ.100 டெபாசிட் செய்து பொதுமக்கள் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கினால் கியூஆர் கோடு இடம் பெற்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்துகொள்ளலாம் என்ற செய்தியைத் தான் பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டு வதந்தியை பரப்பியுள்ளனர் என கூறினார்.
மேலும் இதை போலவே தேவிக்குளம் பகுதியிலும், தாசில்தார் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்தால் இலவச வீடு, நிலம் ஆகியவை வழங்கப்படும் எனபதை நம்பியும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.