கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுனர் அறைந்ததில் முன்னாள் எம்.எல்.ஏ பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ லாவு மம்லதார். 68 வயதாகும் இவர் சமீபத்தில் ஒரு வேலையாக கர்நாடக மாநிலம் பெலகாவி வந்துள்ளார். அங்குள்ள ஸ்ரீனிவாஸ் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று அவர் தனது காரில் காதேபஜார் பகுதியில் சென்றபோது ஆட்டோ ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் லாவு மம்லதார் காரை நிறுத்தாமல் நேராக லாட்ஜுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் காரை துரத்திச் சென்று லாட்ஜ் முன்னாள் மம்லதாரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மம்லதாரை ஆட்டோ டிரைவர் கன்னத்திலேயே அறைந்துள்ளார்.
பின்பு அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து அழைத்து சென்ற நிலையில் லாட்ஜ் படியேறும்போது மம்லதார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K