டெல்லியில் பணியை விட்டு நீக்கிய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் ஷர்மா என்பவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணியாற்றிய ஜோகிந்தர் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்ட காரணத்தினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜோகிந்தர், என்னை பணியில் இருந்து நீக்கியதால் நீ அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலமுறை தினேஷ் ஷர்மாவை எச்சரித்துள்ளார். ஆனால் இதை தினேஷ் சர்மா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று காலை தினேஷ் ஷர்மா அலுவலகத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஜோகிந்தர் தனது கூட்டாளி ஒருவருடன் பைக்கில் காரை வழிமறித்துள்ளார். தினேஷ் ஷர்மா காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அப்போது ஜோகிந்தர் தினேஷ் ஷர்மாவை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தினேஷ் ஷர்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஜோகிந்தர் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.