தேர்தல் ஆணையம் சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதியை மட்டும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தது. மத்திய அரசின் நெருக்கடியால்தான் குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவரே விமர்சனம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அவர்தான் மத்திய அமைச்சர் மேனகாகாந்தியின் மகனும் எம்பியுமான வருண்காந்தி. தேர்தல் ஆணையம் பல் இல்லாத புலி என்றும் குஜராத் மாநிலத்தின் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பல்கலைக்கழக விழாவில் வருண்காந்தி தெரிவித்த இந்த கருத்து பாஜக கட்சியினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.