எஸ்பிஐ வங்கி மூலமாக அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் மேலதிக தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தேர்தல் பத்திரம் மூலமக கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை தடை செய்த உச்சநீதிமன்றம், அதுகுறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்குமாறு உத்தரவிட்டது. இதற்காக எஸ்பிஐ கேட்ட கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் எஸ்பிஐ சமர்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் நேற்று தேர்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் அதில் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு தொகையை வழங்கியது என்ற தகவல் உள்ள நிலையில் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவல் இல்லை. மேலும் கட்சி ரீதியாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட மொத்த பண மதிப்பு மட்டுமே உள்ளது. இதை குறிப்பிட்டு புதிய உத்தரவை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வழங்கப்பட்டது? யாரால் பணமாக்கப்பட்டது? தேர்தல் பத்திர எண் உள்ளிட்ட மேலதிக விவரங்களையும் வரும் திங்கள் அன்று வெளியிட வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் எந்தெந்த நிறுவனங்களிடம் எந்தெந்த கட்சிகள் நிதி அதிகமாக பெற்றுள்ளன என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.