ட்ரோன் மூலம் பான்மசாலா விற்ற இருவர் கைது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மதுபான கடைகள் மற்றும் பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் மது மற்றும் போதைக்கு அடிமையான சிலர் ஏதாவது செய்து குறுக்கு வழியில் போதை மருந்துகளை வாங்கும் செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற பகுதியில் போதை மருந்து விற்பனை செய்யும் ஒருவர் ட்ரோன் மூலமாக அருகில் இருக்கும் வீடுகளுக்கு போதை மருந்துகளை சப்ளை செய்ததாகவும் ட்ரோன் மூலம் பான்மசாலாவை பெற்றுக் கொண்டவர்கள் ட்ரோன் மூலமே பணத்தையும் அளித்ததாக தகவல்கள் வெளிவந்தது
ஒரு சிலர் இது குறித்த வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோக்களில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ட்ரோன் மூலம் பான்மசாலா உள்ளிட்ட போதை மருந்துகளை விற்பனை செய்தவரையும் ட்ரோன் ஆப்பரேட்டரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
இக்கட்டான நேரத்தில் மருந்து பொருட்கள் சப்ளை செய்ய பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் தற்போது போதை மருந்துகளை சப்ளை செய்ய பயன்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது