ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக பின்பற்றுவதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ள நிலையில் மெழுகுவர்த்தி , அகல்விளக்கை ஏற்றும் முன் ஆல்கஹால் கலந்து சானிடைசரி பயன்படுத்த வேண்டாமென பிரசார் பாரத் செய்தி சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலமாக நமது ஆரோக்கியத்திற்காக உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சக மக்களை அந்த 9 நிமிடத்தில் நினைத்து பார்க்க வேண்டுமென அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் , பிரசார் பாரத் நியூஸ் சர்வீஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், நாளை 9 மணிக்கு அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றும்போது ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என சோப்பு போட்டு மட்டும் கழுவிட்டு விளக்கேற்றும்படி அறிவுறுத்தியுள்ளது.