டெல்லியில் உள்ள ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில், 16 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
காவல்துறையினர் கைப்பற்றிய தற்கொலை கடிதத்தில், பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தியதே தனது மரணத்திற்கு காரணம் என்று அவன் உருக்கமாகக்குறிப்பிட்டுள்ளான். மேலும், தன் பெற்றோரிடமும், அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "எனது உறுப்புகளைத் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்" என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தான்.
மாணவனின் தந்தை, தன் மகனின் மனநல பிரச்சினைகள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அண்மையில், தவறி விழுந்த தனது மகனுக்க்கு ஆசிரியர் உதவாமல், அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாகவும் தந்தை கூறினார். இதேபோல மற்ற மாணவர்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில், காவல்துறையினர் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.