டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருவதாக வி.எம் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 60 நாடகளுக்கும் மேலாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.
டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய 11 வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை 1 ½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகக் கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் தங்களின் கொடியைப் பறக்கவிட்டனர். இப்போராட்டத்தில் ஒரு விவசாயில் உயிரிழந்தார். பின்னர் விவாசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சனையாகி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் பெரிதும் காயப்பட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இப்போராட்டத்தை நடத்திவரும் அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு தங்களின் போராட்டத்தை இன்றுடன் முடிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து இப்போராட்டக் குழு தலைவர் வி.எம் சிங், போராட்டம் திசைமாறிச் செல்லுவதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்ப பெற்றால் மட்டும்தான் பேச்சுவார்த்தைக்கு சம்பதிப்போம் என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.