டெல்லியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலித்த போலி பெண் காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டராக தன்னை காட்டிக்கொண்டு போலீஸ் உடையில் திரிந்த பெண் ஒருவர் பொதுமுடக்க விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்து அபராத ரசீது அளித்துள்ளார்.
பயணிகளும் அவர் உண்மையான போலீஸ் என நம்பி அவரிடம் அபராதம் கட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மப்டியில் வந்த இரு போலீசாரையும் நிறுத்தி பெண் போலீஸாக நடித்தவர் அபராதம் விதித்துள்ளார். அவரது போலி அபராத ரசீதை கண்டுகொண்ட போலீஸார் உடனடியாக அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர் போலீஸ் போல நடித்து பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.