மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென்று, கெஜ்ரிவாலின் மனைவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக கூறி அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. தன்னுடைய கைதை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது அவர் கூறிய பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது
இந்நிலையில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா, அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைத்தளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜரிவாலுக்கு உத்தரவிட்டனர்.