மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய டம்லுக் தொகுதியின் பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் டம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 15ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அபிஜித், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது பேச்சுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 17ம் தேதி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் 20ம் தேதி அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியது என முடிவு செய்தது. இதையடுத்து இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.