2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான பிரச்சாரத்தை நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது காங்கிரஸ் கட்சி.
2024ம் ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே ஈடுபடத் தொடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் நிலையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு வடகிழக்கு, தென் மாநிலங்களில் உள்ள ஆதரவை பயன்படுத்தி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் உள்ளது.
இந்நிலையில் கட்சி தொடங்கப்பட்ட 138வது ஆண்டு தினத்தை ஒட்டி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை “நாங்கள் தயார்” என்ற பெயரில் நாக்பூரில் நாளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். நாக்பூரில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.