ஆன்லைன் விளையாட்டுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு காரணமாக ஏராளமாக பணத்தை இழந்த இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கோரிக்கை விடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மக்களவையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விஷ்ணுதாத் என்ற எம்பி ஆன்லைன் விளையாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். ஆன்லைன் விளையாட்டில் வன்முறை மற்றும் பண இழப்பு ஏற்படுகிறது என்றும் அதை கருத்தில் கொண்டு ஒரு வாரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட வேண்டும் என்ற அனுமதிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா போல் இந்தியாவிலும் அதுபோன்று விதிக்கப்படுமா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்பு, சவால்கள் குறித்து மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றும் இருப்பினும் நேர கட்டுப்பாடு எதுவும் விதிக்க அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.